விற்பனைக்கு வந்த RBI தங்கப்பத்திரம்: தங்க நகைகளை விடவும் இது எப்படி லாபகரமானது?
விற்பனைக்கு வந்த RBI தங்கப்பத்திரம்: தங்க நகைகளை விடவும் இது எப்படி லாபகரமானது?
விற்பனைக்கு வந்த RBI தங்கப்பத்திரம்: தங்க நகைகளை விடவும் இது எப்படி லாபகரமானது?
தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், விலை உயர உயர வட்டி வாயிலாக அதிக லாபமும் தங்கப் பத்திர முதலீட்டின் மூலம் கிடைக்கும்.
விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க…!
ஏற்கெனவே 3 சீரிஸ் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது 4-வது சீரீஸ் இன்று திங்கள்கிழமை தொடங்கி, ஜூலை 16-ம் தேதி வரை நடக்கிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்காவது சீரீஸ் தங்கப்பத்திர வெளியீட்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,807 ரூபாயாக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இதை ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக ஆஃபர் விலை ரூ.4,757.

நடப்பு ஆண்டுக்கான முதல் சீரீஸ் விற்பனை மே 17-ம் தேதி தொடங்கிய நிலையில், இரண்டாவது சீரீஸும் உடனடியாக மே 24-ம் தேதி தொடங்கப்பட்டது. 2-வது சீரிஸில் முதலீட்டுப் பத்திரத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,842 என நிர்ணயம் செய்யப்பட்டது. முதல் சீரிஸில் இதன் விலை ரூ.4,777-ஆக இருந்தது. மூன்றாவது சீரீஸ் மே 31-ம் தேதி தொடங்கி, ஜூன் 4-ம் தேதி முடிவடைந்தது. 3-ம் சீரீஸ் தங்கப்பத்திர வெளியீட்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,889 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நான்காவது சீரிஸ் தங்கப் பத்திர வெளியீட்டில் நாம் முதலீடு செய்யலாமா என்பது குறித்து தெரிந்துகொள்ள, கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் பேசினோம்.
“இந்தத் திட்டத்தின் கீழ் 1, 5, 10, 50 & 100 கிராம் தங்கப் பத்திரங்கள் வாங்க முடியும். நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சம் 4 கிலோ மதிப்புள்ள தங்கப் பத்திரங்கள் வாங்கலாம்.
தங்கத்தின் விலை ஏற்ற லாபத்துடன், கூடுதலாக ஆண்டுக்கு 2.5% வருமானம் கிடைக்கும். இந்தத் தங்கப் பத்திரங்கள் வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் (SHCIL), தபால் அலுவலகங்கள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.
மூலதன ஆதாய வரி கிடையாது
எட்டு ஆண்டுகள் கழித்து முதிர்வில் விற்கும்போது கிடைக்கும் லாபத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது. முதிர்வுக் காலம் 8 ஆண்டுகள் என்றாலும் 5, 6, 7-வது ஆண்டுகளில் இந்தத் தங்கப் பத்திரங்களை விற்று, முதலீட்டினை வெளியே எடுக்க முடியும்.
இந்தத் திட்டத்தில் முதலீட்டை திரும்பப் பெறும்போது தங்கமாகத் தரமாட்டார்கள். இது இந்தியாவின் தங்க இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், இந்த நிபந்தனை. தங்கப் பத்திரங்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது, முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை அடிப்படையில் பணமாகத் தருவார்கள்.
தங்க நகைகள் மீது இந்தியர்களுக்கு இருக்கும் ஆர்வம் என்றைக்கும் குறைந்தது கிடையாது. அந்தஸ்தின் அடையாளமாகத் தங்கம் பார்க்கப்படுவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். ஆனால், சமீப காலமாக, அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்கள் மீது மக்களின் கவனம் திரும்பக் காரணம், கொரோனா ஊரடங்கு நடைமுறைதான்.
தற்போது நிலவிவரும் கொரோனா காலகட்டத்தில் நகைக் கடைகள் இல்லை என்பது ஒரு முக்கியமான காரணம். தவிர, தங்கத்தைப் பத்திரங்களாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் எனப் பணம் வீணாவதில்லை என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர். அதனால், வெறுமனே தங்கமாக அல்லாமல், பேப்பர் தங்கமாக வாங்கி வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், விலை உயர உயர வட்டி வாயிலாக அதிக லாபமும் தங்கப் பத்திர முதலீட்டின் மூலம் கிடைக்கும்.
இதன் மூலம் முதலீடு செய்திருக்கும் தங்கத்துக்கு வட்டி வாயிலாக அதிக வருமானம் ஈட்டிக்கொள்ள முடியும் என்பதாலும் மக்களின் ஆர்வம், பிசிக்கல் தங்கத்திலிருந்து தங்கப் பத்திர முதலீட்டின் மீது திரும்பியிருக்கிறது. தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது சிறந்த ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
Also Read
Gold லாபகரமான முதலீடா? – தங்க நகை முதல் `கோல்டு பாண்டு’ வரை!
ஒருவர் தனது முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவில் தங்கப் பத்திரங்கள் உட்பட கோல்டு இ.டி.எஃப் மாதிரியான தங்கம் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களுக்கு 10% வரை இடமளிக்கலாம்” என்றார் தெளிவாக.
ஆக, தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், `தங்கப் பத்திரங்களின்’ மீது கவனம் செலுத்தலாமே!